தொழில் அதிபர் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகளும், கடந்த 28ம் தேதி மிகப்பெரிய விலை உயர்வை சந்தித்தன. இதன் காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆய்வு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
இதை தொடர்ந்து ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி உச்ச நீதிமன்றம் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யை இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
கடந்த வாரம் செபி தாக்கல் செய்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர், ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
ஹிண்டன்பர்க் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறியிருந்தது.
இதன் காரணமாக அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் கடந்த நவம்பர் 28ம் தேதி அதிக உயர்வை கண்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் 10.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு கடந்த நவம்பர் 28ம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து வர்த்தக நேர முடிவில் 11.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
பல்வேறு வெளிநாட்டு சதிகளை முறியடித்து இந்திய தொழில் அதிபர் அதானி குழும சந்தை மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.