ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை அட்சதையுடன் வீடு வீடாக வழங்கி அழைக்கும் வி.எச்.பி.!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகளை நாடு முழுவதும் வீடு, வீடாகச் சென்று வழங்குவதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.

அயோத்தி குழந்தை ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை கலசத்திற்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா கலாசார மையத்தில் (நவம்பர் 28) சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதை தொடர்ந்து அட்சதை அடங்கிய கலசங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. சின்மயா மிஷன் துறவி சுவாமி மித்ரானந்தா, சுவாமி யுக்தேஸ்வர் விஸ்வலிங்கர், வாதவூர் அடிகளார் ஆகியோர் அட்சதை கலசங்களை வி.எச்.பி., மாவட்ட செயலர்களிடம் வழங்கினர்.

இது தொடர்பாக, வி.எச்.பி., மாநில அமைப்பாளர் ராமன் கூறியிருப்பதாவது:

அயோத்தியில் உள்ள குழந்தை ராமருக்கு பூஜை செய்யப்பட்ட அட்சதை மற்றும் ராமர் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ் ஆகியவற்றை, தமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு நேரில் வழங்க இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள், சமுதாய அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், ராம பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர், ஜனவரி 1 முதல் 15-ம் தேதி வரை இந்தப் பணிகளில் ஈடுபடுவர்.

பல நூற்றாண்டுகள் நடந்த போராட்டத்திற்கு பின் சுமுகமான முடிவு எட்டப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவு நனவாகியுள்ளது. இந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்து குழந்தை ராமரை தரிசிக்க அழைப்பு விடுக்கவே வீடு வீடாகச் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top