தமிழக மின் வாரியத்தின் மெத்தனத்தால் மாதத்துக்கு 8 பேர் உயிரிழப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மின் வாரியத்தால் 17 ஆயிரத்துக்கும் அதிகமான மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் பகிர்மானக்கழகத்தால் குடியிருப்பு, வர்த்தகம், தொழிற்சாலைகள் என மூன்றே கால் கோடி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் புதை மின் வடம் மூலமாக மின் இணைப்பு தரப்படுகிறது. மற்ற பகுதிகளில் மின் கம்பிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மின் இணைப்புகள் அதிகரிப்பதன் காரணமாக, மின் கட்டமைப்பு விரிவாகிக் கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக அதி நவீனமான மின் உபகரணங்களைப் பயன்படுத்தி மின் இணைப்பு தருவது போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மின் பகிர்மானக்கழகம் மெத்தனமாகவுள்ளது.
இதன் காரணமாக பொது மின் கட்டமைப்புகளில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
இது தொடர்பான பல்வேறு தகவல்களையும், கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகச் சேகரித்துள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்துள்ளன.
2006லிருந்து 2023 வரை 18 ஆண்டுகளில் தமிழகத்தில் மின்சாரம் தாக்கி 8850 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மட்டும் 1589 பேர் உயிரிழந்துள்ளனர். மாதத்துக்கு சராசரியாக ஏழெட்டு பேர் உயிரிழக்கின்றனர். இதை தவிர தாழ்வான மின் கம்பிகள், அறுந்தவை, பழுதான மின் கம்பங்களால் 2,495 விலங்குகளும் உயிரிழந்துள்ளது.
சமீபத்தில் பெங்களூருவில் கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து ஒரு பெண்ணும், அவருடைய குழந்தையும் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில் மின் வாரியத்தின் கோட்டப் பொறியாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தரும் விடியாத திமுக அரசு மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு எதுவுமே தருவதில்லை.
இரு மாதங்களுக்கு முன்பு கோவை தடாகம் பகுதியில் இரவில் பிக்கப் வேன் திடீரென எரிந்துள்ளது. அதன் உரிமையாளர் அதை அணைக்க முயன்று தண்ணீரை ஊற்றிய போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவர் மனைவியும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். வேன் மீது மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்ததே உயிரிழப்புக்குக் காரணம்.
இந்த சம்பவத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது போன்ற மின்சார விபத்துக்கள், உயிரிழப்புகள் தொடராமலிருக்க மின் கம்பிகளின் கீழே ‘காடி’ போன்ற அமைப்பை எல்லா இடங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென்று, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.