வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு வந்த நீங்கள், எங்களை நிச்சயம் மீட்பீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது என உத்தரகாசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக உருக்கமாக பேசியுள்ளனர்.
உத்தரகண்ட் சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கியிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இரு தரப்பினரும் மிகவும் உருக்கத்துடன் தங்களுடைய நிலையை விளக்கினர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் நடைபெற்று வரும் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின்போது, அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்து, 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். அவர்கள் 17 நாட்கள் முயற்சிக்குப் பின் கடந்த நவம்பர் 28ம் தேதி இரவு மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்தத் தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இது தொடர்பான ‘வீடியோ’வை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த உரையாடலின்போது, பிரதமர் மோடி கூறியதாவது:
மிகப் பெரும் அபாயத்தில் இருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வந்துள்ளதற்காக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை எப்படி எதிர்கொண்டிருப்போம் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கடவுளின் அருளால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் உள்ளே இருந்த 17 நாட்களும் தொடர்ந்து நிலவரம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோரிடம் விசாரித்து வந்தேன். பிரதமர் அலுவலக அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், பாராட்டுகளுக்கு உரியவர். தன் நீண்ட கால ராணுவப் பயிற்சியை அவர் இந்த தருணத்தில் சரியாக வெளிப்படுத்தினார். உள்ளே சிக்கியிருந்த காலத்தில் உங்களுடைய மன உறுதி, நிலைமையை சமாளித்த விதம் பிரமிப்பாகவும் மற்றவர்களுக்கு உந்து சக்தியாகவும் அமையும்.
உங்களுடைய குடும்பத்தார் காட்டிய பொறுமை, நம்பிக்கை அசாத்தியமானது. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கூறியதாவது:
நாங்கள் அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக இருந்தோம். சரியான நேரத்தில் தேவையான உணவு, குடிநீர், பழங்கள் என அனைத்தும் கிடைத்தன. காலை மற்றும் மாலை நேரங்களில் சுரங்கத்துக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்தோம், யோகா பயிற்சியும் செய்து வந்தோம்.
நீங்கள் எங்களுக்கு பிரதமராக கிடைத்துள்ளீர்கள். வெளி நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த நீங்கள், எங்களை நிச்சயம் மீட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அதனால் அந்தக் கவலை எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.