கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று (டிசம்பர் 1) ஒரே நாளில் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதோடு இ- மெயிலில் வந்த தகவலால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பெங்களூர் பசவேஸ்வரா நகர், கெங்கேரி, எலகங்கா, எமலூர், ஒயிட்பீல்டு உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்று (டிசம்பர் 1) காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகளுக்கு சென்றது.
அதில் விளையாட்டு மைதானத்தில் வெடிபொருட்கள் உள்ளன. நீங்கள் அல்லாவின் எதிரிகளாக இருந்தால் உங்களையும், உங்களின் குழந்தைகளையும் கொன்று விடுவோம். உருவ வழிபாட்டை புறக்கணிக்க வேண்டும். அதோடு அல்லாவின் உண்மையான மார்க்கத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும். நீங்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமிய வாளுக்கு பதில் சொல்லி இறக்க நேரிடும். அல்லாஹூ அக்பர்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
முதலில் 15 பள்ளிகளுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு இதன் எண்ணிக்கை என்பது 44, 48 என உயர்ந்ததோடு 68 என்ற அளவில் உயர்ந்தது.
பெங்களூரில் உள்ள 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் சென்றது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டு உள்பட வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. அதோடு இ-மெயிலில் வந்தது வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் Kharijites@beeble.com என்ற பெயரிலான இமெயில் முகவரியில் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அது யார்? எங்கிருந்து வந்தது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.