துபாய் சி.ஓ.பி., 28 எனப்படும் ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று (டிசம்பர் 1) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று (டிசம்பர் 1) கோலாகலமாக துவங்கியது. இதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அப்போது சி.ஓ.பி., 28ன் தலைவர் சுல்தான் அல் ஜபர் மற்றும் ஐ.நா., பருவநிலை மாற்ற தலைவர் சைமன் ஸ்டெய்ல் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பருவநிலை மாற்றம் என்பது கூட்டு சவால். ஒருங்கிணைந்த உலகளாவிய பதிலை, அது எப்போதும் கோருகிறது. பருவநிலை மீதான குறிக்கோள்கள் அதிகரித்துள்ளன. அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் இருக்க வேண்டும்.
இந்த சந்திப்பு பயனுள்ள பருவநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பருவநிலை குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை நோக்கி முன்னேற, இந்த உச்சி மாநாடு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இது சர்வதேச ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் இந்தியா நம்புகிறது.
பசுமையான, வளமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் கூட்டாக செயல்படுகின்றன.
பருவநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய பேச்சில், செல்வாக்கு செலுத்துவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் வலுவான மற்றும் நீடித்த உறவுகளை கொண்டிருக்கின்றன.
உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் முன்னணியில் உள்ளன. இத்துறையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகள், 2050க்குள் கரியமில வாயு வெளியீட்டை முற்றிலும் குறைக்க வேண்டும்.
பருவநிலை குறித்து பேசும்போதெல்லாம், அதற்கு தேவைப்படும் நிதி எப்போதும் தொக்கி நிற்கும் கேள்வியாக உள்ளது. இந்த ஒருங்கிணைந்த சவாலுக்கு, உலகளாவிய பதில் தேவைப்படுகிறது.
இந்த விவகாரத்தில் வளர்ந்த நாடுகளின் பங்களிப்பு குறைவாகவே உள்ளன. அவை அதிகரிக்கப்பட வேண்டும்.
எனவே, தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய ஒத்துழைப்புக்கு நான் வலுவாக வாதிட்டேன். வரும் 2028ல் நடக்கும் 33வது பருவநிலை மாநாட்டை, இந்தியா நடத்த வேண்டும் என முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பருவநிலை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு எல்லாம் இந்தியர்களுக்கு என்ன மரியாதை கிடைத்தது என்றும், தற்போது மோடி அரசாங்கம் வந்த பின்னர் உலகளவில் நமது நாட்டின் குடிமகன்களுக்கு கிடைக்கின்ற வரவேற்பை அனைவரும் அறிந்திருப்போம்.