தேர்தலுக்கு முன்பும் பின்பும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தவிடு பொடி ஆக்கி விட்டு,
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மூன்று மாநிலங்களிலும் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் கைப்பற்றியதை விட தற்போது அதிக இடங்களை பாஜக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது பாஜக.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம், தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மத்திய பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றிய பாஜக:
மத்திய பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், 164 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்று காங்கிரஸ் இண்டி கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 65 தொகுதிகளே கிடைத்துள்ளன. பாரதிய ஆதிவாசி கட்சி ஓரிடத்தை கைப்பற்றி உள்ளது. வாக்குப்பதிவுக்கு பின்னான கருத்துக்கணிப்பில், இந்த மாநிலத்தில் இரண்டு சரி சமமான கடும் போட்டி இருக்கும் என்றே கணிக்கப்பட்டு இருந்தது.
மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சிவராஜ் சிங்சவுகான் 1,64,951 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் சர்மாவுக்கு 59,977 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 2023 மார்ச் 5-ம் தேதி ‘லாட்லி பெஹ்னாயோஜனா’ பெண்கள் நலதிட்டத்தை தொடங்கினார். இதன்படி 1.31 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,250 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தாய்மார்கள் இடம் பெருத்த ஆதரவு இருந்தது. இதனால் வாக்களித்த தாய்மார்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்தது.. ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் அலை மற்றும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் காரணமாக பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது’’ என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது வெற்றிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.ஒட்டுமொத்தமாக மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு 48.66 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 40.46 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அதாவது சென்ற தேர்தலை விட கிட்டத்தட்ட 9% அதிகம்.
தொகுதி எண்ணிக்கையில் மட்டுமல்ல, வாக்கு வித்தியாசங்களும் அதிகம் என்பதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது காங்கிரஸ்.
ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்திய பாஜக:
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு ஒரு முறை ஆட்சி செய்த கட்சி மறுமுறை வராது என்ற நிலை இருப்பதால் பாஜக மெல்லிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணிக்கப் பட்டு இருந்தது. ஆனால் இங்கும் காங்கிரஸ் கட்சியால் எண்ணிப்பார்க்க முடியாத பெரிய வெற்றியை பெற்றுள்ளது பாஜக..
மாநிலத்தில் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன . ஆட்சி அமைக்க 100 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 115 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
காங்கிரஸுக்கு வெறும் 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாரதிய ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்டிரிய லோக்தந்திரிக், ராஷ்டிரிய லோக்தளம் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. 8 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ஜால்ராபாடன் தொகுதியில் 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.ராஜஸ்தானில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 100, பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 31 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 42 இடங்கள் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக ராஜஸ்தானில் பாஜகவுக்கு 41.73 சதவீத வாக்குகளும், காங்கிரஸுக்கு 39.54 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன..
சத்தீஸ்கரில் மிதப்பில் இருந்த காங்கிரஸை அலேக்காக அகற்றிய பாஜக:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 46 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் பாஜக 54 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸுக்கு 35 தொகுதி மட்டுமே கிடைத்தன. இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பும் பின்னும் ஆன அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் கட்சி எளிதாக, சிறந்த வெற்றி பெறும் என்றே கூறி இருந்தன. மாநில முதல்வரும் அப்படி ஒரு செல்வாக்கை வளர்த்திருந்தார். சத்தீஸ்கரில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரசுக்கு 68, பாஜகவிற்கு வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே கிடைத்து இருந்தன. இந்த முறை, நிலைமை அப்படியே தலை கீழாக மாறியது. காங்கிரஸ் 33 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 39 இடங்கள் கிடைத்துள்ளன.
பாஜக முதல்வர் வேட்பாளராக கருதப்படும் ரமண் சிங், ராஜ்நந்தகாவ்ன் தொகுதியில் வெற்றி பெற்றார். சத்தீஸ்கரில் பாஜகவுக்கு 46.30 சதவீதவாக்குகள், காங்கிரஸுக்கு 42.14 சதவீத வாக்குகள் பதிவாயின.
அசைக்க முடியாத முதல்வர் என்று கருதப்பட்ட பூபேஷ் பாதல் ஆன் லைன் சூதாட்ட செயலி ஒன்றின் மூலம் 700 கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பதாக வந்த குற்றச்சாட்டு அவரை கவிழ்த்தியது. அந்த சூதாட்டத்தின் செயலியான மகாதேவ் செயலியின் சத்தீஸ்கர் முகவராக செயல்பட்ட அசீம் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘மகாதேவ் செயலி நிர்வாகம் தரப்பில் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு ரூ.508 கோடி வழங்கப்பட்டது’’ என்று தெரிய வந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாதேவ் செயலி விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி பிரதானமாக எழுப்பினார். இது காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து காங்கிரசின் ஊழல்களை சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் வெற்றி உறுதி என்ற மிதப்பில் இருந்த மாநிலம் காங்கிரஸ் இடம் இருந்து பறிபோயிற்று.
தெலங்கானாவில் ஆட்சியை பறிக்கொடுத்த கே.சி.ஆர்:
தெலங்கானாவில் சந்திரசேகரராவ் ஆட்சியை இழந்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. சென்றமுறை ஒரே ஒரு இடம் பெற்றிருந்த பாஜக, இம்முறை எட்டு இடங்களை பெற்று வரலாறு படைத்துள்ளது.
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி நடத்தி வந்தது. அந்த மாநிலத்தில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 60 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 64 தொகுதிகளை பிடித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதிக்கு 39, பா.ஜ.க.வுக்கு 8, ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 7, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.
தெலங்கானாவில் கடந்த 2018 தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19, பாஜக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாரத் ராஷ்டிர சமிதி 49 தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸுக்கு கூடுதலாக 45 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜகவுக்கு கூடுதலாக 7 இடங்கள் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 39.38 சதவீத வாக்குகளும், பாரத் ராஷ்டிர சமிதிக்கு 37.38 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 13.90 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
நடந்து முடிந்த ஐந்து மாநிலங்கள் தேர்தலில், மூன்று மாநிலங்களில் வெற்றி, ஒரு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று முத்திரை பதித்த பாஜகவுக்கு இந்த வெற்றிகள் 20 24 லோக்சபா தேர்தலுக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!