‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று (டிசம்பர் 3) இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நகரின் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வ சாதாரனமாக சாலையை கடந்து மறுபுறம் ஊர்ந்து சென்ற முதலையை கண்ட வாகன ஓட்டிகள், அதிர்ச்சியடைந்தனர்.
முதலை சாலையை கடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த சமயத்தில் முதலை வருவது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் வடிகால் பணிக்காக ரூ.4,000 கோடியை செலவு செய்த மாநகராட்சி, மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காத அளவிற்கு திட்டத்தை முழுமையாக நிறைவேறியதாக கூறிவந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. எங்கே போனது ரூ.4000 கோடி என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலையை சாலையில் உலாவிடுவதுதான் உங்களின் ரூ.4,000 கோடி திட்டமா எனவும் இணையத்தில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.