பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையே ராஜஸ்தானில் பாஜக வெல்ல காரணம் என முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
பாலைவனங்கள், கோட்டைகள் என, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. தேர்தல் கணிப்புகளை நம்பி எப்படியாவது வெற்றி பெற்று விடுவோம் என்று இருந்த காங்கிரசுக்கு, ராஜஸ்தான் தோல்வி மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில்
கடந்த, 2018ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை என்ற நிலையில் 100ல் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க, 73 இடங்களில் வென்று ஆட்சியைப் இழந்தது. ஆனால் அதன் பின் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு, நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு என்ற பாடத்தை காங்கிரசுக்கு புகட்டியது.
இந்த நிலையில் இம்முறை எப்படியும் மாநிலத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிய காங்கிரஸ் மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளது. காரணம், தெளிவான வெற்றியை பாஜக பதிவு செய்தது தான் இந்தத் தேர்தல் முடிவுகள், தேர்தல் நிபுணர்களுக்கு கூட அதிர்ச்சியை அளித்துள்ளன. கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க., அபார வெற்றியை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தோல்விக்கு, 2018 தேர்தலுக்குப் பின் நடந்த சம்பவங்களே விதையாக அமைந்துள்ளது.
அந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதற்கு, அப்போது மாநிலத் தலைவராக இருந்த சச்சின் பைலட் முக்கிய காரணமாக அமைந்தார். முதல்வர் பதவி அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் மூத்தவரான அசோக் கெலாட்டுக்கு வழங்கப்பட்டது. அதன் பின் சச்சின் பைலட்டை தொடர்ந்து அவமதித்து வந்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் தோல்வி ஏற்படக் கூடும் என்று கூறப்பட்ட போதும் மேலிடம் இதனைக் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் அரசின் பெருத்த ஊழல்களையும், ஹிந்துக்களுக்கு எதிரான துரோகங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரங்களில் மக்கள் மத்தியில் நல்ல முறையில் பதிய வைத்தார். இதுவே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
கடந்த 25 ஆண்டுகளாக ராஜஸ்தானில், எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை. அதுதான் இந்த முறையும் நடந்துள்ளது என்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. சச்சின் பைலட் செல்வாக்கான பகுதிகளில் அவரைத் தவிர எந்த காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் ..
இந்த நிலையில் ராஜஸ்தான் வெற்றி குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே தெரிவித்ததாவது:
காங்கிரசின் மோசமான நிர்வாகத்தை நிராகரித்து பா.ஜ.க.,வின் நல்லாட்சியை ஏற்றுக் கொண்ட ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். இந்த வெற்றி, 2024ல் பிரதமர் மோடி மக்கள் சேவையைத் தொடர்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும் கட்சித் தலைவர் நட்டாவின் தலைமை மற்றும் தொண்டர்களின் தன்னலமில்லா உழைப்புக்கு கிடைத்த பலன் இது, என்று கூறினார்