மழை வெள்ளநீரில் கலந்த ஆயில் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடலில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் மழையை தொடர்ந்து புழல், பூண்டி ஏரிகளில் இருந்து அதிகபட்சமாக, 48,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அதோடு வடசென்னையின் ஒட்டுமொத்த மழைநீரும் பகிங்ஹாம் கால்வாயில் பெருக்கெடுத்தது.
இந்த மூன்று நீர்நிலைகள் வழியாக வெளி வெள்ளநீர், எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். ஆனால் இந்த விடியாத திமுக அரசு சரியாக கால்வாய்களை தூர்வாராமல் விட்டதன் விளைவாக ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளை வெள்ளநீர் மூழ்கடித்தது.
தற்போது வெள்ளம் வடிய துவங்கியிருக்கும் நிலையில், தொழிற்சாலைகளில் புகுந்த வெள்ளநீர் ஆயில் கழிவுகளுடன் கலந்து தற்போது எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.
மேலும் சுற்றுவட்டார வீடுகளில் கழிவுநீருடன் ஆயில் கலந்து தேங்கி உள்ளதால், வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் வீணாகி உள்ளன. வீட்டு சுவர்களிலும் ஆயில் படர்ந்துள்ளன. இதனால் பகுதிவாசிகள் உடல் உபாதைகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கழிவு நீர் கடலில் கலக்கும் போது மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.