டிசம்பர் 4 சென்னையை ஆட்கொண்டிருந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்ட லக்ஷோப லக்ஷம் மக்களில் நானும் ஒருத்தி என்று ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெயந்தி ஐயங்கார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி தனது பதிவில் கூறியிருப்பதாவது:
3ம் தேதி இரவு 2 மணி முதல் பயம் தொற்றிக் கொண்டது. சாலையில் தேங்கியிருந்த நீர் எதோ செய்தது. நாங்கள் வசிக்கும் தரை தள வீட்டில முன்னெச்சரிக்கையாக சிலவற்றை மாற்றி வைத்திருந்தோம். 4 மணி சுமாருக்கு வீட்டுக்குள் மழை நீர் வரத்துவங்கியது.
5 மணிக்கு, அடுத்தகட்ட பாதுகாப்பு பணியில் இறங்கினோம். 7: 30 மணிக்கு மேல் நிலைமை கைமீறி போனது. தெருவில் 4 அடிக்கு மழை நீர், வீட்டுக்குள் 2 அடிக்கு நீர். புத்தகங்கள், துணிமணிகள் மழை நீருக்கு இரையாகியிருந்தது.
இதற்குள் பாதுகாப்பு கருதி வயதானவர்களை மாடி வீட்டிற்கு அழைத்து சென்ற விட்டு, கீழே வந்து பார்த்தால். ஃப்ரிட்ஜ் மிதக்கிறது, கேஸ் சிலிண்டர் மிதக்கிறது, தாம் தரிகிட தாம் தரிகிட தத்தா என்று மழை வெள்ளம் ஆடிக்கொண்டு நான் சாமர்த்தியமாக வாங்கி வத்திருந்த பலசரக்கு பொருட்கள் அனைத்தையும் தனதாக்கிக் கொண்டது.
எங்கும் இருள். வீட்டுக்குள் மழை நீர், ஆனால் குடிக்க அரை கேண் தண்ணி அதில் 12 பேர். டேங்க் இருப்பு தெரியாது. இப்படியே 30 மணி நேரம் ஓட்டினோம். அதன் வீட்டை வந்து பார்த்தால் வீடு போர்க்களம் போன்று காட்சியளித்தது. நண்பர்கள் உதவியோடு ஒரு ரூம் புக் பண்ணிக் கொண்டு 250 மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்கு துழாவி துழாவி அரை மணி நேரத்தில் சென்றடைந்தோம்.
நான் வசிப்பது சென்னையின் மையப் பகுதியில். இந்த வீடு 85 ஆண்டு வரலாறு கண்ட வீடு. தற்போதைய உரிமையாளர் 67 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சதுர அடி 15,000 முதல் 17,000 வரை போகிறது. சென்னையின் அடையாளமாக திகழும் இடம். மின்சாரம் இல்லை, நெட்வொர்க் இல்லை, இந்த இடம் மூன்று நாட்கள் அப்படியே இருந்தது. நான்காம் நாள் தானாக வடியத் துவங்கியது. இங்கு ஒரு கல்வித் தந்தை வசிக்கிறார்.
இவை எல்லாம் முடிந்து இன்று வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. இது எங்கள் பகுதியின் நிலை. இங்கு வசிப்பவர்கள் பலர் முதியவர்கள்.
தேடிய, அழைத்த, மெசேஜ் அனுப்பிய, கமெண்டில் நான் போட்ட தகவலுக்கு ஆறுதல் சொன்னா அனைவருக்கும் நன்றி.
நான் எப்பொழுதும் ஸ்ட்ராங், எது வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்று நினைப்பேன். ஆனால் இம்முறை இறைவா போதும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.