காஷ்மீர் இணைப்புத் தாமதத்திற்கு நேருவே காரணம் – அமித்ஷா சாடல்

இந்தியாவுடன் காஷ்மீர் இணைவது தாமதமாக காரணம் முன்னாள் பிரதமர் நேருதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் (நேரு) தாமதமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீரில் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாகிறது.

370வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன் அடைந்து வந்தன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்து விட்டன. கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் கையில் நாங்கள் லேப்டாப்களை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

370வது பிரிவை ரத்து செய்யும் முடிவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி 370வது பிரிவை ரத்து செய்வதற்கான தொலைநோக்கு முடிவை எடுத்தார். இந்த பிரிவை ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பியுள்ளது.

ஒரு காலத்தில் வன்முறையால் சிதைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மனித வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளில் செழிப்படைந்துள்ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் வசிப்பவர்களின் வருமானம் உயர்ந்துள்ளது. 370வது பிரிவை ரத்து செய்யும் முடிவு முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது.

370வது பிரிவை ரத்து செய்த பிறகு ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. பிரிவினைவாதம், கல்வீச்சு ஆகியவை கடந்த கால விஷயங்கள் ஆகிவிட்டன. இப்பகுதி முழுவதும் இப்போது இனிமையான இசை மற்றும் கலாச்சார சுற்றுலா நிகழ்வுகள் எதிரொலிக்கின்றன. ஒற்றுமையின் பிணைப்புகள் வலுவடைந்துள்ளன.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானவை. பிரதமர் மோடி தலைமையின் கீழ், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் நீடித்த அமைதியை நிறுவுவதற்கும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அரசு உறுதி பூண்டுள்ளது. புதிய சலுகைகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது, அதிநவீன கல்வி உள்கட்டமைப்பை உருவாக்குவது அல்லது ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என எதுவாக இருந்தாலும், பிராந்தியத்திற்காக முழுசக்தியையும் மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்தும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top