சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் இன்று (டிசம்பர் 13) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரசை வீழ்த்தி, பெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி. அதனைத் தொடர்ந்து கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விஷ்ணு தியோ சாய், பாஜக எம்.எல்.ஏ.க்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக அருண் சாவோ மற்றும் விஜய் ஷர்மா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று முதல்வரின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இதில் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அருண் சாவோ மற்றும் விஜய் ஷர்மா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பெகல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.