நாம் அனைவரும் தேசத்திற்காக சேவையாற்ற வந்துள்ளோம். எனவே நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 13) பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் லோக்சபா கூடியதும், காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ‛‛பார்வையாளர் மாடத்திற்குள் இருந்து இருவர் நுழைந்த சம்பவத்தில் எம்.பி.க்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பாதுகாப்பில் குளறுபடி உள்ளது’’ எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதில் அளித்து பேசியதாவது: பார்வையாளர் மாடத்திற்குள் இருந்து இருவர் நுழைந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது சாதாரண வண்ண புகை தான் எனத் தெரியவந்துள்ளது.
அனைவரின் கருத்தையும் ஏற்று பரிசீலித்து இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்திற்காக சேவையாற்ற வந்துள்ளோம். எனவே நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும். இருவரும் பிடிபட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.