தற்போதைய நடைமுறைக்கு பயன்படாத 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று (டிசம்பர் 13) நிறைவேறியது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 1,562 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு 2014ல் அமைந்த பின் தற்போதைய காலத்துக்கு ஒத்துவராத தேவையில்லாத பழைய சட்டங்களை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த வரிசையில் கடந்தாண்டு டிசம்பரில் 65 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து மேலும் 11 பழைய சட்டங்கள் சேர்க்கப்பட்டு புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் கடந்த ஜூலை 27ம் தேதி நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. கடந்த 1885ல் அறிமுகம் செய்யப்பட்ட சுரங்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1950ல் அறிமுகமான தந்தி சட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ல் அமைந்தது முதல் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தேவையில்லாத பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 1,486 சட்டங்கள் நீக்கப்பட்ட நிலையில், இந்த 76 சட்டங்களையும் சேர்த்து இந்தப் பட்டியல் 1,562ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2004 – 2014 காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஒரு பழைய சட்டம் கூட ரத்து செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.