நாடாளுமன்றத்தில் அத்துமீறியதற்காக கைது செய்யப்பட்ட நபர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து நேற்று (டிசம்பர் 13) புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடினர். இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் கோஷமிட்டனர். வண்ண புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இது தொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.
மக்களவைக்குள் புகுந்தவர்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் மைசூருவை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் என்ற இளைஞர்கள்.
இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே 2 பேர் கோஷமிட்டனர். இதில் ஹரியாணாவை சேர்ந்த நீலம் என்ற பெண் சிவில் சர்வீஸ் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். இன்னொருவர் அமோல் ஷிண்டே, இவர்களையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்ட, “அதிகார மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் என்பது எதிர்க்கட்சித் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தி வரும் பதங்கள். நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு கைதானவர்களில் ஒருவரான நீலம் ஆசாதை சந்தியுங்கள். அவர் ஒரு தீவிர காங்கிரஸ் இ.ண்.டி. கூட்டணி ஆதரவாளர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றிருக்கும் இவர் ஒரு கிளர்ச்சியாளர்.
இப்போது கேள்வி என்னவென்றால் யார் இவர்களை அனுப்பியது? அவர்கள் ஏன் மைசூரில் இருந்து ஒருவரைத் தேர்த்ந்தெடுத்து பாஜக எம்.பி.யிடம் இருந்து நாடாளுமன்றம் செல்லும் பாஸ் பெறவேண்டும். அஜ்மல் கசாப்பும் மக்களை குழப்புவதற்காக கலவா அணிந்திருந்தார். இதுவும் அதுபோன்ற தந்திரம் தான். எதிர்க்கட்சிகளால் எதுதையும் நிறுத்த முடியாது. ஜனநாயகத்தின் உயரிய அமைப்பான நாடாளுமன்றம் களங்கப்படுத்தப்பட போதும் கூட’’ என்று தெரிவித்துள்ளார்.
மனோரஞ்சன் காங்கிரஸ் அல்லது எஸ்எஃப்ஐ இயக்க ஆதரவாளரா? அவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டாரா? இதன் அடிநாதம் இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. டிசம்பர் 13ம் தேதி ஏதோ ஒரு நோக்கத்துடன் நாடாளுமன்றத்தைக் களங்கப்படுத்தியுள்ளன என்று பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது விசாரணை முடிவில் தெரியவரும். இன்னும் தலைமறைவான இரண்டு பேரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.