நாடாளுமன்றத்தில் இரண்டு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் மேலும் 4 பேர் இருப்பதும், நண்பர்களான இவர்கள் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று (டிசம்பர் 13) நாடாளுமன்ற அரங்கத்தின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி காவல்துறையிடம் ஒப்படைந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பர்கள் இணைந்து செயல்படுத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருந்து வந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராம் நகரில் வசித்து வரும் விஷால், லலித் ஆகிய 6 பேர் இந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான 6 பேரும் கடந்த சில நாள்களாக இந்தத் தாக்குதலுக்காக திட்டமிட்டு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு யாரேனும் அல்லது எந்த அமைப்பாவது இவர்களை ஊக்குவித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.