காசி தமிழ் சங்கமம் 2.0 : 216 பேர் ரயிலில் பயணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

காசி தமிழ் சங்கமம் 2.0 வருகின்ற டிசம்பர் 17ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் 216 பேருடன் வாரணாசி செல்லும் ரயிலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 15) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் தமிழக பாஜக மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உடனிருந்தார்.

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும் காசி தமிழ் சங்கமத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கல்வி அமைச்சகத்தால் 17 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது கட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் கட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து 2500-க்கும் மேற்பட்டோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள், வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றனர்.

அப்போது அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி உள்ளிட்ட வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆழமான அனுபவத்தைப் பெற்றனர். அவர்கள் கருத்தரங்குகளில் பங்கேற்றனர், கண்காட்சிகளைப் பார்வையிட்டனர், உள்ளூர் உணவு வகைகளை ருசித்தனர், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர், வரலாற்று மற்றும் சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். கல்வி அமைச்சகம் இந்த திட்டத்தை வழிநடத்திய போதிலும், பங்கேற்பு அமைச்சகங்கள் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசின் பங்கு அதை சாத்தியமாக்குவதில் ஒருங்கிணைந்தது.

கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் மேலும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதுபோலவே காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்விலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். இந்த முறையும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சிக்கு முதல் ரயிலை இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த முதல் ரயிலில் 216 பேர் வாரணாசிக்கு பயணிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் பலர் வாரணாசிக்கு செல்ல இருக்கிறார்கள்.

இந்த பயணத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது கலாச்சாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக காசி தமிழ் சங்கமம் 2.0 இருக்கும் எனவும், நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top