குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் கடந்த 16ம் தேதி இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் கோரம்பள்ள குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டது, சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், 1ஸ்பிக் நகர் உள்பட பல இடங்களில் கனமழையால் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது.
கோரம்பள்ள குளம் உடைந்தது:
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ள குளம் நிரம்பி, குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டு மொத்த தண்ணீரும் தூத்துக்குடி நகரப் பகுதியை நோக்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அத்திமரப்பட்டி, ஸ்பிக் நகர், முத்தையாபுரம், வீரநாயக்கன்தட்டு குடியிருப்பில் வசிப்போர் பாதுகாப்பான இடம் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மூழ்கியது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்வதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரம்பள்ளம் குளத்தின் 24 மதகுகளும் திறக்கப்பட்டதாலும் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும் ஆட்சியர் அலுவலகத்தை தண்ணீர் முழுமையாக சூழ்ந்தது. அலுவலக வாயிலில் இருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தம்:
தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்குள் எந்த வாகனங்களும் வர முடியாத நிலையில் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் ஆகிய 4 வழித்தடங்களிலும் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு போக்குவரத்துக் கழக டெப்போ மழை நீரில் மூழ்கியுள்ளது.
திருநெல்வேலியில் சூழ்ந்த மழை வெள்ளம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரில் பல பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். ஆனால் திமுக மேயர் சேலத்தில் நடைபெற உள்ள உதயநிதி மாநாட்டின் முன்னேற்பாடு நிகழ்ச்சிகளை பார்வையிட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விடியாத அரசு கோட்டை விட்டதோ அதே போன்றுதான் தென் மாவட்டங்களிலும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்றுவரை செல்லாமல் உள்ளார். மற்ற அமைச்சர்களும் சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டின் முன்னேற்பாடுகளை கவனித்து வருகின்றனர். வாக்களித்த மக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்துக்கொடுக்காமல் மாநாட்டு முன்னேற்பாடுகளை கவனிப்பதா என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.