மாநிலங்களவை தலைவரை திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கிண்டல் செய்த போது அதனை கண்டிக்காமல் ராகுல் செல்போனில் புகைப்படம் எடுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது, வெட்கக்கேடானது என ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கடுமையாக சாடியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்த எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அராஜகத்தில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (டிசம்பர் 19) காலை காந்தி சிலை முன்பு பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது திரிணமுல் காங்கிரசின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று அனைவரின் முன்னிலையில் மிமிக்கிரி செய்து காட்டினார். அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது செல்போனில் அதனை வீடியோ படம் எடுத்தார். .
கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுலின் செயலையும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பேசுகையில், மக்களவை தலைவருக்கும், மாநிலங்களவை தலைவருக்கும் வேறுபாடு உண்டு. அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் மாநிலங்களவை தலைவரை கேலி செய்யும் எம்.பி., யை மற்றொரு கட்சியின் தலைவர் வீடியோ எடுக்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆபத்தானது, வெட்கக்கேடான செயல் என அதிருப்தி தெரிவித்தார்.