அவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்திற்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கேலி செய்து கொண்டிருந்தார். அதனை காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மிமிக்ரி விவகாரம் தொடர்பாக ராகுல் மற்றும் திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பா.ஜ.க. அமைச்சர் மங்கள் பிரபாத், கலாசவுக்கி காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.