நிறைவேற்றப்பட்டன மூன்று குற்றவியல் திருத்த சட்ட மசோதாக்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதா லோக்சபாவில் விவாதத்துக்கு பின் நேற்று (டிசம்பர் 20) நிறைவேற்றப்பட்டது.

ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 மற்றும் 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டன.

இந்த மூன்று சட்டங்களையும் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அந்த மூன்று சட்டங்களும் முறையே ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய சன்ஹிதா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டன. அவற்றில் திருத்தம் மேற்கொண்டு மூன்று புதிய குற்றவியல் திருத்த சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்தது.

இதில் சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து நிலைக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதாக்கள் அனுப்பப்பட்டன. இவற்றிற்கு நிலைக்குழு பல பரிந்துரைகளை அளித்தது.

இதைத் தொடர்ந்து பழைய மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டு நிலைக்குழு அளித்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட புதிய மசோதாக்கள் கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நடந்தது.

இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு வாயிலாக மசோதாக்கள் நேற்று (டிசம்பர் 20) நிறைவேற்றப்பட்டன.

விவாதத்துக்கு பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபையில் பேசியதாவது:

மூன்று மசோதாக்களும் விரிவான ஆலோசனைகளுக்குப் பின் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு செய்யப்பட்டன.

அவை ஒப்புதலுக்காக சபையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் வரைவு சட்டங்களின் ஒவ்வொரு காற்புள்ளி மற்றும் முழு நிறுத்தத்தையும் கவனமாக படித்துப் பார்த்துள்ளேன்.

தற்போது நடைமுறையில் உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களும் ஆங்கிலேயர் ஆட்சியின் மனநிலையை பிரதிபலிப்பவை. தண்டிப்பது மட்டுமே அவற்றின் நோக்கமாக உள்ளதே தவிர நீதியை நிலைநாட்டுவது நோக்கமாக இல்லை.

பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டங்களை தான், நாம் இதுநாள் வரை பின்பற்றி வருகிறோம். நாம் சுதந்திர பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ‘ஹெர் மெஜஸ்டி, பிரிட்டிஷ் ராஜ்ஜியம், தி கிரவுன், பாரிஸ்டர்’ போன்ற வார்த்தைகள் நம் சட்டங்களில் பயன்பாட்டில் உள்ளன.

பழைய சட்டத்தில் பாலியல் பலாத்காரம் சட்டப்பிரிவு 375 மற்றும் 376 ஆக இருந்தது. அதை சட்டப்பிரிவு 63 ஆக மாற்றியுள்ளோம். கொலைக் குற்றம் சட்டப்பிரிவு 302ல் இருந்து 101 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆள் கடத்தல் சட்டப்பிரிவு 359ல் இருந்து 136 ஆக மாற்றப்பட்டுள்ளது.

கும்பலால் தாக்கப்பட்டு நிகழும் படுகொலைக்கான தண்டனை குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சிதம்பரம் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

கும்பல் படுகொலைகளுக்கு மரண தண்டனை விதிக்க புதிய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு இந்திய மனநிலையை புரிந்து கொள்ள முடியாது.

உங்கள் ஆட்சியின் போது, கும்பல் படுகொலைக்கு ஏன் நீங்கள் தண்டனை விதிக்கவில்லை? இந்திய மனநிலை இருந்தால் மட்டுமே நம் சட்டங்களை புரிந்து கொள்ள முடியும். இத்தாலிய மனநிலையால் புரிந்து கொள்ள இயலாது.

பொதுவாகவே நீதி கிடைப்பது தாமதமாகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீதிமன்ற விசாரணை இழுத்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

போலீசை கேட்டால் நீதிமன்றத்தையும், அரசையும் கைகாட்டுகின்றனர். நீதிமன்றம் போலீசை கைகாட்டுகிறது, அரசு போலீசையும் நீதிமன்றத்தையும் கைகாட்டுகிறது. இப்படி ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்துவது தொடர்கிறது.

இதனால் ஏழை எளிய மக்கள் வழக்குகளை நடத்தி முடிக்க அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைகள் எல்லாம் புதிய சட்டங்களில் சரி செய்யப்பட்டு உள்ளது.

இனி ஒரு வழக்கு குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையை 14 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

அதன் பின் 24 மணி நேரத்துக்குள் விசாரணை அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விசாரணை நிலுவையில் இருந்தாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 180 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கான சிறப்பு அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

தீர்ப்புகளை 45 நாட்களுக்கு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்க முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில் தடய அறிவியல் துறையினரின் பங்களிப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலைக்காக மனு தாக்கல் செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அந்த ஏழு நாட்களில் நீதிபதி விசாரணையை நடத்த வேண்டும். அதிகபட்சமாக 120 நாட்களில் வழக்கு விசாரணைக்கு வரும்.

இனி குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை குறைவாக இருக்கும். வழக்கு விசாரணையின் போது ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது. அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் காலதாமதம் செய்யப்படாது.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் போன்ற வழக்குகளில், குற்றவாளிகள் பாகிஸ்தான் சென்று தஞ்சம் அடைவதால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கின்றனர். இதனால் வழக்கு நிலுவையில் கிடக்கின்றன.

இனி, 90 நாட்களுக்கு மேல் குற்றவாளி நேரில் ஆஜராகவில்லை எனில் அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top