உள்நோக்கத்துடன் விவசாயி மீது குண்டர் சட்டம்! சென்னை உயர் நீதிமன்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திமுக அரசு அறிவித்தது. இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேரை கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தது அரசு.

இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கடந்த நவம்பர் 15ம் தேதி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். உடனடியாக விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதே போன்று ஒட்டுமொத்த விவசாயிகளும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை திரும்பப்பெற்ற அரசு, அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவில்லை.

இந்த நிலையில், தனது கணவர் அருள் ஆறுமுகத்தின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருள் ஆறுமுகம் எந்தவொரு தீவிர குற்றத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரமும் இல்லாத நிலையில் மக்களைத் தூண்டியதாகவும், நிலம் வழங்க முன்வருபவர்களை தடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம். எனவே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள் அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மற்றும் விசாரணை ஆவணங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

நீதிமன்றம் குட்டு வைத்தாலும் திமுக அரசு திருந்தாது. விவசாயிகளின் நிலங்களை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் செய்து வருகின்றனர் என விவசாயிகளே குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top