தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்ல. இந்த சூழ்நிலையை அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தென் மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. போட்டிருக்கும் துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை மழை வெள்ளம் உருவாக்கியது. வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது. கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மழை, வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது. தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்ல. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது. மழை வெள்ளத்தை கையாள்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது என்றார்.
அதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களை சந்தித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.