முத்ரா வங்கி திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தலைப்பில் நேற்று (டிசம்பர் 24) விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் முருகன் பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி பேசியதாவது:
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முத்ரா வங்கி திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தில் 18 தொழில் மேற்கொள்வோர் பயனுடைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற யாத்திரை வாகனத்தில் புதிய ஆதார், ஆயுள் காப்பீடு விண்ணப்பங்கள் பதிவு செய்தல், விஸ்வ கர்மா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 18 தொழில் பயன்களுக்கான விண்ணப்பம் பெறுதல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன.
ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசின் சார்பில் வீடு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ‘உஜ்வாலா’ திட்டத்தின் கீழ் சமையல் காஸ் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘ஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இது பற்றி அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் ‘‘வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய பயண யாத்திரை’’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களில் பயன்பெறும் பொதுமக்களுக்கு திட்ட பயன்களை வழங்கினேன்.
இந்நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான#PMSVANidhi நிதி உதவி திட்டம், முத்ரா கடன் உதவி, உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் திட்ட பயன்கள் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்கள் மற்றும் புத்தகங்களை பிரச்சார வாகனத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் வழங்கினேன்.
இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கதுடன் மோடி-ஜியின் உத்திரவாத வாகனம், அனைத்து தரப்பு மக்களிடையே வளர்ச்சிப் பணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வலம் வருகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.