தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 24) ஆலோசனை நடந்தது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தன. உடனடியாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மத்திய அதிகாரிகள் குழு வந்து ஆய்வு நடத்தியது.
இதனைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் பெருமழை மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. இங்கும் மத்திய குழுவினர் உடனடியாக வந்து ஆய்வு நடத்தினர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (டிசம்பர் 26) தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் அலுவலகத்தில் உயர்நிலை கூட்டம் நேற்று (டிசம்பர் 24) நடந்தது. இந்த கூட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய நிலவரம், நிவாரண பணிகள், உதவிகள் வழங்குவது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மறுசீரமைப்பு பணிகள் நிவாரணம் குறித்து தமிழக அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
ஏற்கனவே புயல் பாதித்த ஒரு சில நாட்களிலேயே தமிழகத்திற்கான ரூ.943.6 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது. தற்போது ஆய்வு முடிவுகளை கொண்டு அடுத்தக்கட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.