தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு பற்றி இன்று (டிசம்பர் 26) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கடந்த டிசம்பர் 16 முதல் 4 நாட்கள் கொட்டித் தீர்த்த மிக கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இதனை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்தார்.
அவரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, போலீஸ் எஸ்.பி., பாலாஜி சரவணன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் வந்த நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மழை வெள்ள பாதிப்பு குறித்த படக்காட்சிகளை நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் பாதிப்பு குறித்து விளக்கி கூறினர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியுதவியை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.