நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிசம்பர் 25) ஒப்புதல் அளித்தார்.
ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 மற்றும் 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களையும் இந்த காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, உரிய பெயர் மாற்றங்களுடன் ( பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷி ) தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதா, லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் மூன்று மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று (டிசம்பர் 25) அம்மூன்று மசோதாகளுக்கு ஜனாபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இனி இவை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும்!