புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. விடியாத திமுக அரசின் விசாரணையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஒரு குற்றவாளியையும் காவல்துறை பிடிக்க இல்லை. அதற்கான நடவடிக்கையை வேகப்படுத்த இந்த விடியாத அரசு முயற்சியும் செய்யவில்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இதுவரை 221 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் 31 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இருந்து, 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் யாரும் கைது செய்யப்படாததால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடுத்தடுத்த கட்ட உயர் தொழில்நுட்ப விசாரணைக்கு உட்படுத்தி விசாரித்து வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர். ஆனால் எத்தனை நாட்கள் தான் இப்படி விதவிதமாக காரணம் சொல்லி வருவார்கள் என மக்கள் கேட்கிறார்கள்…l
சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளான இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பட்டியலின மக்களுக்கு பாதுகாவலர்கள் நாங்கள்தான் என திமுக கூறிவரும் நிலையில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இதுவரை கைது செய்யாமல் இருப்பதுதான் பட்டியலிலின பாதுகாப்பா ? இந்த ஆட்சியின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் போதாதா என்று அம்மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் !