பிரபல சமூக ஊடகமாக விளங்கும் ‘யு- டியூப்’பில் இரண்டு கோடி சந்தாதாரர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
தற்போதைய அரசியலில் டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்ந்து வருகிறார்.
தினந்தோறும் நடைபெறும் அரசுப்பணிகள் மற்றும் கட்சிப்பணிகளை சமூக ஊடகங்களான, யு டியூப், எக்ஸ், வாட்ஸாப், முகநூல் உள்ளிட்டவைகளில் தொடர்ந்து அவர் ‘வீடியோ’க்களாக புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார்.
அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் போன்றவை அவரது தனிப்பட்ட பக்கத்திலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பகிரப்பட்டு வருகிறன்றன.
இந்த நிலையில், யு டியூபில் அதிக சந்தாதாரர்களை பெற்ற தலைவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் யு டியூப் சேனல் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு கோடி பேரை சந்தாதாரர்களாக பெற்ற நிலையில் தற்போது அது இரண்டு கோடியாக உயர்ந்துள்ளது.
அவரது தளத்தில் வெளியிடப்படும் வீடியோக்கள் 450 கோடி முறை பார்வையிடப் பட்டுள்ளன. அதேபோல் பிரதமருடன் தொடர்புடைய, ‘மோடியுடன் யோகா’ என்ற யு டியூப் சேனலும், 73,000க்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளது.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, 64 லட்சம் சப்ஸ்க்ரைபர்களுடன் பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனோரா இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் 11 லட்சம் பேருடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளார். நான்காவது இடத்தில் 7.94 லட்சம் பேருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளார்.
உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.