‘‘மண்ணின் பெருமைக்காக வாழ, இந்தியர்களுக்கு சீக்கிய குருக்கள் கற்றுக் கொடுத்தனர். நாட்டை வளர்ச்சியடைய செய்ய அவர்கள் உத்வேகமாக செயல்பட்டனர்’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சீக்கிய குருவான, குரு கோபிந்த் சிங்கின் இரு மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டெல்லியில் நேற்று நடந்த, ‘வீர் பால் திவாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது:
முகலாயர்களால் தூக்கிலிடப்பட்ட குரு கோபிந்த் சிங்கின் மகன்கள் ஜோராவர் சிங், பதே சிங் ஆகியோரின் தியாகங்கள், நம் நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலகளவில் நினைவு கூரப்படுகின்றன. மண்ணின் பெருமைக்காக வாழ, இந்தியர்களுக்கு சீக்கிய குருக்கள் கற்றுக் கொடுத்தனர். நாட்டை சிறப்பாகவும், வளர்ச்சியடையச் செய்யவும் அவர்கள் உத்வேகமாக செயல்பட்டனர். நம் நாடு தற்போது அடிமை மனநிலையில் இருந்து வெளியேறி வருகிறது.
நாட்டு மக்கள், அவர்களின் திறன்கள் மற்றும் பாரம்பரியத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டில், இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டம் அரசிடம் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில், இளைஞர்களுக்காக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உலகம் தற்போது, நம் நாட்டை வாய்ப்புகளின் பூமியாக பார்க்கிறது.
உலகளாவிய சவால்களை தீர்ப்பதில் நம் நாடு பெரும் பங்காற்றுகிறது. பொருளாதாரம், அறிவியல், ஆராய்ச்சி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் நம் நாடு தலைசிறந்து விளங்குகிறது. நாம் ஒரு வினாடியை கூட வீணாக்காமல், நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும். இளைஞர்கள் தங்களது ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாட்டை கைவிட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.