தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பகிர்மான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டதால் கோவில்பட்டி நகரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. அதிகமான பாதிப்புகளை தூத்துக்குடி மாவட்டம் சந்தித்தது. மழை வெள்ளத்தில் வீடுகள், கால்நடைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன.
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் இடங்களில் குடிநீர் திட்ட பகிர்மான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோவில்பட்டி நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கழுகுமலை, கயத்தாறு மற்றும் வல்லநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் பெறும் விளாத்திகுளம், எட்டயபுரம், மாசார்பட்டியிலும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சேதமடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் மிக முக்கியமான அத்தியாவசிய பண்டம் என்ற நிலையில் அதன் விநியோகத்தில் அலட்சியம் காட்டும் திராவிட மாடல் அரசுக்கு கண்டங்கள் வலுத்து வருகின்றன.