மோசமான நிர்வாகத்தால் சபரிமலை பக்தர்கள் அவதி: பிரதமர் மோடி கவலை!

‛‛சபரிமலையில் நடக்கும் மிக மோசமான நிர்வாகத்தால் ஐயப்ப பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சாட்சி’’ என திரிச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க., மகளிர் அணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

லட்சத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் கேரளா மாநிலம் நெடும்பசேரிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் காரில் பேரணியாக சென்றார். அப்போது வழிநெடுகிலும் பா.ஜ.க., தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் பிரதமரை மலர்தூவி வரவேற்றனர். தொண்டர்களை பார்த்து பிரதமர் கையசைத்தபடியே சென்றார்.

அதன்பின் பாஜக மகளிர் அணி மாநாட்டை பிரதமர் அடைந்தபோது மகளிர் அணி நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை, அன்பையும் வெளிப்படுத்தினர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதற்காக பெண்கள் நன்றியை தெரிவித்தனர்.

அப்போது பிரதமர் பேசியதாவது:

என்னை வாழ்த்த ஏராளமான பெண்கள் கூடியிருப்பது பெருமை அளிக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு பெண்கள் சக்தியை, இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக கருதியது. இதனால் அக்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடையை ஏற்படுத்தின.

பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஏராளமான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் வழியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

நாட்டில் இன்று பெரிய சாலைகள், நவீன விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் கேரளாவில் மோடி எதிர்ப்பை மட்டுமே கொண்டுள்ள ‛இ.ண்.டி.’ கூட்டணி அரசால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கொள்ளையடிப்பதற்கு கேரளாவில் முழு சுதந்திரம் தேவை என அக்கட்சிகள் நினைக்கின்றன. ஏழை மக்களுக்காகவும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் மத்திய அரசு அளிக்கும் நிதி குறித்து கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டங்களை மறைக்க முயற்சி செய்கின்றனர்.

இ.ண்.டி. கூட்டணிக்கு ஒரு விஷயம் தான் தெரியும். அக்கூட்டணியினர் நமது நம்பிக்கையை காயப்படுத்துகின்றனர். நமது கோயில்கள், பண்டிகைகளை கொள்ளையடிப்பதற்கான மையமாக மாற்றியுள்ளனர். இது மாதிரியான அரசியல், ‛திரிச்சூர் பூரம்’ விழாவில் நடப்பது வேதனை அளிக்கிறது. சபரிமலையில் நடக்கும் மோசமான நிர்வாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதுவே மாநில அரசின் இயலாமைக்கு சான்றாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top