‘‘கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், எதிரணியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான வரலாற்று ஒற்றுமை என்பது ஊழல்தான்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா வந்த பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியில் நடைபெற்ற பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களின் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘விரைவான வளர்ச்சி, எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை கொண்ட நாட்டின் ஒரே கட்சி பாஜகதான். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளதாக சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியானது. இது மிகப்பெரிய சாதனை.
கடந்த 50 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது. மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களின் பணத்தை சேமிப்பதையும் முதன்மை நோக்கமாக பாஜக கொண்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்களின் பணம் ரூ.1 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்பதன் மூலம் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது என்பது நிரூபணமாகி உள்ளது. மக்களைத் தேர்தல் நாட்டுக்கான அரசை தேர்ந்தெடுக்க உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. இதனால், நமது முதலீடுகள் பாதிக்கப்பட்டன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் பாதிக்கப்பட்டார்கள். கேரளாவில் இருக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய ஜனாநயக முன்னணிக்கும் இருக்கும் வரலாற்று ஒற்றுமை என்பது ஊழலும் முறைகேடுகளுமே.
சமீபத்தில் திருச்சூரில் நடைபெற்ற பெண்கள் சக்தி மாநாட்டில், கேரள பாஜகவின் ஆற்றலை பார்க்க முடிந்தது. எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். அதுபோன்ற ஒரு மிகப்பெரிய மாநாட்டை, மிகவும் வலிமையான அமைப்புகளால் மட்டுமே நடத்த முடியும். நீங்கள் அனைவரும் மிகப்பெரிய உழைப்பை வழங்கி இருக்கிறீர்கள் என்பதை அது காட்டியது. மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தி இருக்கும் பாஜகவினரோடு இருப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. நெருக்கடியான நேரத்திலும் கட்சியின் கொள்கையில் உறுதியோடு நின்றதற்காக உங்களை வணங்குகிறேன். உங்களின் உறுதியும், தேசப்பற்றும் வணக்கத்திற்குரியது.
மக்களவைத் தேர்தல் நெருங்குகிறது. பாஜகவின் வெற்றியில் கேரளாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நமது முதல் உறுதியே, பூத் அளவில் கவனம் செலுத்துவதுதான். பூத் வெற்றியே கேரளாவில் வெற்றி கொள்வதற்கான வழி. இதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். ஒவ்வொரு வாக்காளர்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். கேரள மக்களோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவே இலக்கு யாத்திரையில் ஒவ்வொருவரையும் சேருங்கள். அதேபோல், மோடியின் வாக்குறுதி எனும் இயக்கத்திலும் மக்களை இணையுங்கள். உலகின் மிகப்பெரிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் தன்னம்பிக்கை தற்போது உயர்ந்திருக்கிறது. பாஜக மக்களின் கட்சி. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரின் வளர்ச்சியில்தான் வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் கனவு அடங்கி இருக்கிறது. இந்த நான்கு வகை மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை முதன்மையாகக் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.