‘கடவுள் மைனர்’ என்பதால், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை (17.01.2024) அன்று உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கரூர் மாவட்டத்தில் பல கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அல்லது முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்; கோவில்கள் தரப்பில், ‘சட்டம் – -ஒழுங்கு பிரச்னையை கருதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை தவிர்க்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில்:
பெரும்பாலும் சட்ட பட்டப் படிப்பு படித்தவர்கள் கோவில்களில் செயல் அலுவலர்களாக உள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஒரு பக்தர், நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியுள்ளது.
கடவுள் மைனர்… ஆதலால் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது.
சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி, ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தடுப்பதற்கு பதிலாக, கோவில் நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதற்கு வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை கலெக்டர் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.