உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று (ஜனவரி 22) விண்ணை முட்டிய ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு இடையே ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5ம் தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.
அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான விழா இன்று (22.01.2024) நடத்தப்படும் என்று அயோத்தி ராமர் ஆலய நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் கருவறை புனித நீரால் சுத்தப்படுத்தப்பட்டு யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கடந்த வியாழக்கிழமை இரவு 51 அங்குல ஸ்ரீபால ராமர் சிலை கருவறை பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
அந்த சிலைக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இறுதிக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை இறுதி யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.
இதையடுத்து இன்று காலை அயோத்தி நகரம் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
விழாவுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.
விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் பிரதமரை, முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.
சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத் தலைவர் மோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருடன் இருந்தனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.
கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.
திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள். இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு எல்.இ.டி. திரை ஏற்படுத்தப்பட்டது. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.
500 ஆண்டு கனவு நிறைவேற்றிய வேளையில் விண்ணை முட்டும் அளவு எழுப்பப்பட்டது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் நேரலையில் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் ப்ராணப் பிரதிஷ்டை காண்பதற்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோடிக்கணக்கான மக்கள் அதன் மூலம் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்தனர்.