ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ராமர் கோவில் திறப்பை தேசமே தீபாவளி போல் கொண்டாடுகிறது. காலசக்கரத்தில் இன்றைய நாள் (ஜனவரி 22) ஒரு பொற்காலம். கூடாரத்தில் இருந்த ராமருக்கு தற்போது அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்.
ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு நன்றி. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமன் அரிச்சல்முனை சென்ற போது காலசக்கரம் மாறியது. நானும் அங்கு சென்ற போது அதனை உணர்ந்தேன். இன்று ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
பல நூற்றாண்டுகளாக இந்த பணியை செய்ய முடியாமல் போனதற்கு, நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்
இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பிரபு ராமரின் பக்தர்கள் முழுமையாக உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள். இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றையும் விட புனிதமானது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள். ராமர் புகழ் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். ராமர் என்பது யாரையும எரிக்கும் ஆற்றல் கிடையாது. சக்தியை தரும் ஆற்றல். அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டுமல்ல இந்திய கலாச்சாரமும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.