சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு ஓய்வின்போது சாதாரண அறையில் ஏசி இன்றி உறங்கியுள்ளதை கண்டு வியப்படைந்ததாக மடத்தின் நிர்வாகி சுவாமி சச்சிதானந்தா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பற்றி ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சச்சிதானந்தா கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20ல் புனித தீர்த்தங்களில் நீராடி ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்தார்.
அன்று மாலை 6:45 மணிக்கு மடத்திற்கு வந்தார். இரவு 7:00 மணிக்கு நடந்த ராமர் ராமகிருஷ்ணரின் கீர்த்தனை பஜனையை தரையில் அமர்ந்து கேட்டார்.
ராமர் ராம் கிருஷ்ணர் சாரதாதேவி விவேகா சச்சிதானந்தானந்தர் படத்திற்கு தீபாராதனை காட்டி தரிசித்தார்.
மடத்தில் நடந்த பஜனைக்கு பின் எங்களுடன் பிரதமர் மோடி ‘குரூப் போட்டோ’ எடுத்துக் கொண்டார்.
அரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மடத்தின் சார்பில் 10 துறவிகள் பங்கேற்றனர். பின் அன்றிரவு மடத்தில் உள்ள சிறிய அறையில் பிரதமர் ஓய்வெடுத்தார்.
பிரதமர் 11 நாட்கள் விரதம் இருப்பதால் இரவில் இளநீர் மட்டும் பருகிவிட்டு ‘ஏசி’ ஆடம்பர வசதிகள் இல்லாத 10க்கு 12 அடி அளவு உடைய 14ம் எண் சிறிய அறையில் தரையில் சாதாரண படுக்கை விரித்து ஓய்வெடுத்தார்.
புறப்பட்ட நாள் காலையிலும் எதுவும் சாப்பிடாமல் மீண்டும் இளநீர் மட்டும் குடித்து விட்டு காரில் கிளம்பிச் சென்றார். இது போன்ற ஓர் எளிமையான பிரதமரை நான் பார்த்ததில்லை. இவ்வாறு சுவாமி சச்சிதானந்தா தெரிவித்தார்.