நேற்று (ஜனவரி 31) மாலை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த பின் ஹேமந்த் சோரன், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹேமந்த் சோரன் ரூ.600 கோடி மதிப்புடைய அரசு நிலத்தை பில்டர்களுக்கு விற்பனை செய்ய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே ஐ.ஏ.எஸ் அதிகாரி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாகப் பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி ஹேமந்த் சோரன் வாக்குமூலம் கொடுத்தார்.
ஆனால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 29ம் தேதி டெல்லி சென்ற ஹேமந்த் சோரன் திடீரென தலைமறைவானார். அவரின் இல்லத்திற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரன் நேற்று ராஞ்சி திரும்பினார். பின்னர் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை விசாரித்து வந்தது. இதற்கிடையில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.