ஸ்ரீ கல்கி கோவில் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த ஆச்சார்ய பிரமோத், காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்.
உத்திரபிரதேசம் மாநிலம், சம்பால் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்கல் நாட்டு விழாவானது பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கோவில் வழிபாட்டுத் தலமாகவும், கலாச்சார மரியாதைக்குரிய இடமாகவும், இந்தியாவின் பல்வேறு ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகவும் திகழும்.
இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆச்சார்யா பிரமோத் அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ம் தேதி ஸ்ரீ கல்கி கோவிலுக்கு அடிக்கல் நாட்ட செல்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; “நம்பிக்கை மற்றும் பக்தியுடன் தொடர்புடைய இந்தப் புனிதமான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அழைப்பிற்காக ஆச்சார்ய பிரமோதுக்கு மனமார்ந்த நன்றி.” என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதமருக்கு அழைப்பு விடுத்த ஆச்சார்ய பிரமோத்தை, காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளது.
பல காலமாக பிரதமர் மோடியை வசைபாடியவர் இந்த ஆச்சார்ய பிரமோத். என்றாலும், ராம் மந்திர் விவகாரத்தில் காங்கிரஸின் ‘ராம் மந்திர் விழாவுக்கு செல்லக் கூடாது’ என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.