சமீபத்தில் சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அதிரடியான சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.
இது பற்றிய விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து திமுக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஆர்.எஸ். கன்ஸ்ட்ரைக்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையை சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த ரத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், மணல் குவாரிகளில் மோசடி செய்த ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான 130 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.