‘‘மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்ஹம்ரா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மணி சங்கர் அய்யர் பேசியதாவது:
பாகிஸ்தான் மக்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். தேர்தலில் மோடிக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வாக்குகள் கிடைத்ததில்லை.
ஆனால், இந்திய தேர்தல் நடைமுறைகளின் காரணமாக, மூன்றில் ஒரு பங்கு ஓட்டுகள் கிடைத்தாலும், மூன்றில் இரண்டு பங்கு சீட்டுகளை அவர் பெறுகிறார். எனவே, மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மணி சங்கரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர் இதற்கு முன்பும் பலமுறை பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார். குறிப்பாக மோடி அரசை தோற்கடிக்க பாகிஸ்தான் காங்கிரசுக்கு உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இவர் மட்டுமல்ல இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தானுக்குச் சென்று இந்திய விரோதமாக பேசி இருக்கிறார்கள்
இந்நிலையில் மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.க., பிரமுகர் உதய் பி.கருடாச்சார் கூறியதாவது:
பாகிஸ்தான் நல்ல விதமாக நடந்து கொள்ளும் வரை உலகம் முழுவதும் அவர்களுடன் நன்றாகவே நடந்து கொள்வர். நீங்கள் மற்றவர்களை முட்டாளாக்க நினைத்தால், மற்றவர்களும் உங்களை முட்டாளாக்க நினைப்பர்.
மணி சங்கர் அய்யர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. பாகிஸ்தான் எங்களுடன் நல்ல விதத்தில் நடந்து கொண்டால், இரு நாட்டு உறவு அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் இருக்கும். அதை தான் நாங்களும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.