நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி கடிதம்!

நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால் ,பயனடைந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார்.

அனைவருக்கும் வீடு (ஆவாஸ் யோஜனா), நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச நிலம், அனைவருக்கும் குடிநீர் (ஜல் ஜீவன்), பாரத்நெட், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை,

 நாடு முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, இத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி பாஜக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே, கிராமங்கள், நகரங்களில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ பிரச்சார யாத்திரை மூலமாக மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை கொண்டே, பொதுமக்களிடம் அத்திட்டங்கள் குறித்து பாஜகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். அதேபோல, தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தில், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வருகிறார். பயனாளிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் நாடு முழுவதும் பாஜகவினர் வீடு வீடாக சென்றும் ,பாஜக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரடியாக  வாக்கு சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளை கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது கருத்தை பெற்றும் வாக்கு சேகரிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார். சம்பந்தப்பட்ட பயனாளியின் செல்போன் எண்ணுக்கு கடிதத்தின் லிங்க், குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. அதை கிளிக் செய்து பிரதமர் கையெழுத்திட்ட கடிதத்தை படிக்க முடியும். பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் நடுத்தர வர்க்க மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களை மேலும் வலுப்படுத்த, எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பானதாக கருதுகிறேன். இன்று நாட்டில் உள்ள திட்டங்களின் நேரடி பயன்கள், சாமானிய மக்களை சென்றடைந்து, அவர்களது வாழ்வில் சாதகமான மாற்றங்களை கொண்டுவருகிறது என்றால், எனக்கு இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இருக்க முடியாது. நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்தந்த மாநில மொழிகளில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழிலேயே கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top