இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட , தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை , மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் தமிழக மீனவர்கள் நேற்று (பிப்ரவரி 19) சந்தித்தனர்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில்,
தமிழகத்தைச் சேர்ந்த ‘பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கம்’ மற்றும் ‘நாகை மாவட்ட 66 மீனவ கிராமங்களின் தலைமை கிராம’ மீனவ அமைப்புகளை அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ உடமைகளை மீட்டுத் தருவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.
அவ்வமயம் ,தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட , தமிழக மீனவர்களின் பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாக பதிவில் கூறியுள்ளார்..
அதே போன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப்பதிவில்,
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் மீனவர் தலைவர்களின் குழுவை சந்தித்தேன். அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்திய அரசு செயல்பட்டு வருவதாக உறுதி அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.