மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழா நேற்று (பிப்ரவரி 27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர், பொதுக்கூட்டம் நிறைவு அடைந்த நிலையில், மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள லஷ்மி பள்ளியில் நடைபெற்ற சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான, டிஜிட்டல் செயலாக்க திட்டக் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தி பின்னர் சுந்தரேஸ்வரர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பொற்றாமரை குளத்தைப் பார்வையிட்டார்.
இதனையடுத்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டபோது ,கோவில் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து சென்றார். பின்னர் மதுரை ஆதினம் மடத்தின் முன்பாக நின்றுகொண்டிருந்த . மதுரை ஆதினத்தை பார்த்த பிரதமர் மோடி அவரை கையசைத்து அழைத்தார்.
மதுரை ஆதினத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார்.
இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.