விடிய ,விடிய தேர்தல் குழுவினரிடம் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 29) நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில்  நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. எனவே எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, எதிர்க் கட்சிகளுக்கு முன்பாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சி தலைமை திட்டமிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் தொடர்பாக மத்திய தேர்தல் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று நள்ளிரவு 10:30 மணிக்கு துவங்கிய இந்த ஆலோசனை அதிகாலை 2:30 மணிக்கும் மேல் நீடித்தது. இந்த ஆலோசனையில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.

மேலும், இந்த கூட்டத்தில் உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர சிங் படேல், மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top