மோடி  ஆட்சியில் 12 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு.! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 12 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிலர் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருகின்றனர். இதனை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கின்றனர். அப்படி இருந்தும் திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் போன்றவர்கள் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்களை கடத்தி வந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அது போன்றவர்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளனர். அவரை கைது செய்ய டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வெற்றி குறித்து மூன்று வீடியோக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“போதைப்பொருள் தடுப்பு குறித்த, பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற அணுகுமுறை சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. இந்த அணுகுமுறையின் விளைவாக கைது நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் இல்லாத பாரதம் என்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய பரிசு ஆகும் என்றார். போதைப்பொருள்களைக் கண்டறிதல், அதன் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்தல் ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கை அடையும் நோக்கில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2006 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1257 ஆகும். இது 2014-2023 ஆம் ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 3755 ஆக உயர்ந்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் 1363 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை 2014-23 காலகட்டத்தில் 5745 ஆக 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை 1.52 லட்சம் கிலோவாக இருந்த போதைப்பொருட்களின் பறிமுதல் அளவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இரு மடங்காக 3.95 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் ரூ.768 கோடியாக இருந்த பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 30 மடங்கு உயர்ந்து ரூ.22,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 12 லட்சம் கிலோ போதைப் பொருட்களை, போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் அழித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top