பெங்களூருவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில், இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் பீல்டு கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த உணவகம் இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய வேளையில் வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது. கூட்ட நெரிசலான உணவகத்தில் வெடிகுண்டு வெடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. மேலும் ,இந்த உணவகம் மிகவும் பிரபலம் ஆனது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ புதிய விசாரணைகள் சிலவற்றை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக ஒரு குண்டு வெடித்தால் அதன் வெடிப்பொருட்களை வைத்து எந்த பகுதி தீவிரவாதக் குழு இதை செய்தது என்று என்ஐஏ கணிக்கும். அதை அடிப்படியாக வைத்தே இந்த சோதனைகளை இப்போது என்ஐஏ செய்கிறது என கூறப்படுகிறது.
அதன்படி என்.ஐ.ஏ., அதிகாரிகள் சென்னை மண்ணடியில் ஒரு இடத்திலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. மிக முக்கியமாக, ஏற்கனவே தமிழ்நாட்டில் சோதனை செய்து பல தகவல்களை டேட்டா பேஸில் வைத்துள்ள என்ஐஏ அதன் அடிப்படையில் இந்த சோதனையை முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகிக்கும் நபர் ஒருவர், ஓட்டலின் வளாகத்திற்குள் ஒரு பையை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
போலீசாரின் கூற்றுப்படி, சந்தேகிக்கும் நபர் பையை ஓட்டலில் வைத்துவிட்டு குண்டுவெடிப்பு ஏற்படுவதற்கு முன்னர் வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர் மாஸ்க் கண்ணாடி அணிந்து, தொப்பி அணிந்து காணப்பட்டார்.
வெள்ளிக்கிழமை மதியம் 12:56 மணிக்கு வெடிகுண்டு வெடிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாக, சந்தேகிக்கும் நபர் 11:30 மணிக்கு அந்த இடத்திற்கு வந்து ரவா இட்லிக்கான டோக்கன் வாங்கி உள்ளார். சந்தேகிக்கும் நபர் பேருந்தில், குண்டு வெடிப்பிற்கு பின் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எந்தப் பேருந்தில் சென்றார், எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
விரைவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை என்.ஐ.ஏ., பிடிக்கும் என கூறப்படுகிறது.