‘‘பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி ஒரு லட்சம் கோடியை தாண்டியது’’ என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பாதுகாப்பு துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை ,டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (மார்ச் 4) துவக்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது:
ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் நமது சொந்த நாட்டிலேயே, சொந்த மக்களால் தயாரிக்க வேண்டும். இதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.
2014ஆம் ஆண்டில் நமது பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்தவொரு முக்கியமான துறையிலும் இந்தியா இறக்குமதியை நம்பி இருக்க முடியாது.
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களின் இறக்குமதியை நாம் தொடர்ந்து நம்பினால், அது நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும். பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தன்னிறைவு இல்லாமல் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதைப் பார்த்திருப்போம். பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களில் இறக்குமதி செய்யப்பட்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி அடையும் போது, தொழில்நுட்பத் துறையில் நாடு முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.