ராமேஸ்வரத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல் செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில், இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து, மண்டபம் கடலில் நேற்று (மார்ச் 5) கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இலங்கையை நோக்கி வேகமாக சென்ற நாட்டுப்படகை மடக்கி சோதனையிட்டனர். அதில் ஐந்து சாக்குப் பைகளில் 111 பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த, 99 கிலோ ‘ஹசீஷ்’ என்ற போதைப்பொருள் கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு 108 கோடி ரூபாய்.
இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த ராமேஸ்வரம் அருகே உள்ள அக்காள்மடம் ஊரைச் சேர்ந்த ரெமிஸ்டன், 32, மற்றும் மூவரை கைது செய்து மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போதைப்பொருளை சென்னையில் இருந்து கடத்தி வந்து, மண்டபத்தில் இருந்து படகில் ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு கடத்திச் செல்லத் திட்டமிட்டது விசாரணையில் தெரிந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.